Tuesday 4 December 2012

தோசைக்கல் எத்தனை?

ஆனந்த விகடனில், "நீயா நானா" திரு. கோபிநாத் அவர்கள் ஒரு புதிய தொடரை ஆரம்பிக்க இருக்கிறார். இந்த தொடருக்கான முன்னுரை, இந்த வார இதழில் (5/12/2012), வந்திருந்தது.

ஆனந்த விகடனின் இந்த வார இதழ் பற்றி

இந்த இதழின், மொத்த பக்கங்கள் 100. அதில் விளம்பரங்கள் தாங்கி வந்த பக்கங்கள் 30. மேலும், 'பொக்கிஷம்' என்ற பெயரில், அவர்களது பழைய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 10 பக்கங்கள்.பேஸ்-புக்-போலவே 2 பக்கம்.  பேஸ்-புக்-இல் இருந்து எடுக்கப்பட்ட 2 பக்கம். மொக்கையான பக்கங்கள் ஒரு 10. இவங்க நிஜமாவே, மெனக்கெட்டு தான், ஒவ்வொரு இதழையும் கொண்டு வருகிறார்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.

கோபிநாத் பற்றி

எனக்கு, கோபிநாத் பேச்சுக்கள் மீது பெரிதாக மரியாதை எதுவும் இல்லை. இதற்க்கு, அவர் நடத்தும் "நீயா நானா" தான் காரணம். அவர் ஏற்க்கனவே ஒரு புத்தகம் எழுதியதாக கேள்விப் பட்டேன். ஆனால், வாங்கிப் படிக்கும் ஆர்வம் தூண்டாததால், அதைப் படிக்கவில்லை. மேலும் அவரே அதை வாங்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டிருக்கிறார், வேறு என்ன வேண்டும் நமக்கு. "அப்படியே ஆகட்டும்" என்று விட்டு விட்டேன் :)

இப்போ மேட்டருக்கு வருவோம். இவரது முன்னுரையில்,  'இப்போதெல்லாம் நாம் தேவைக்குப் பொருட்கள் வாங்குவதில்லை, பொருட்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன' என்று கூறி இருந்தார்.

சிறிது சிந்தித்துப் பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை. சரி என்று அதை விட்டுவிட்டேன். என் மனைவி, தன்னை மதுரையில் இருந்து சந்திக்க வரும் தன் தாயிடம், ஏதோ ஒரு பாத்திரம் வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது நான், "அதுதான் ஏற்கனவே 2, 3 பாத்திரம் இருக்கே, அப்புறம் எதுக்கு வேற ஒன்னு கேக்குற?" என்றேன்."மீன் பொரிக்க வேணும்" என்றாள். வழக்கம் போல,  அதன் பிறகு,  நான் கூறிய எதையும் அவள் கவனித்ததாக தெரியவில்லை.

மீண்டும், சிறிது நேர சிந்தனை. என் மனைவியிடம் கேட்டேன் "நம்ம  வீட்டில எத்தனை தோசைக்கல் இருக்கு?" "ம்ம்ம்...4". "எனக்கு வெவரம் தெரிஞ்சதில் இருந்து நான் படிப்பு முடிக்கிற வரைக்கும், எங்க அம்மா எத்தனை தோசைக்கல் வைத்திருந்தாங்க தெரியுமா? ...ஒன்னே ஒன்னு தான்".

இப்போது யோசிக்கிறேன், எத்தனை பிரஷர்  குக்கர்கள் இருக்கிறது. குறைந்தது 6 இருக்கும். வித விதமான அளவுகளில். ஒன்னு, நிறைய தண்ணி துப்புதாம், அதுக்கு மாற்றா அதே அளவுல இன்னொன்னு. ஒன்னு, பிரியாணிக்கு மட்டும். ஒன்னு, வீட்டுக்கு விருந்தாள், வந்தாங்கன்னா...அதுக்கு.

எத்தனை மிக்சி இருக்கிறது....ம்ம்மூணு.

இப்படி பல காரணங்களைச் சொல்லி, வீட்டில் வந்திருக்கும் தேவைக்கதிகமான பொருட்களை கொஞ்ச நேரம் பார்க்கிறேன். இவற்றின் மதிப்பின் கூட்டுத்தொகை எப்படியும் 10 - 15 ஆயிரத்தைத் தொடும். இவை அனைத்தும் கடந்த 4 வருடங்களுக்குள் ஆன செலவு. இதை சேமித்து வைத்திருக்கலாம், வேறு பயனுள்ள வகையில் செலவு செய்திருக்கலாம். இதில் ஒரு பகுதியையாவது சிரமப்படும் மக்களுக்கு கொடுத்திருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, பத்து ரூபாய்க்கு, மூன்று கட்டு கீரை கொடுக்கும் பாட்டியிடம், ஒரு கட்டு கீரை அதிகமாக வாங்க போராட்டம் நடத்துகிறோம்.

ம்ம்ம்...பார்க்கலாம், ஏதாவது மாற்ற முடிகிறதா என்று. முடிந்தால், நீங்களும் எண்ணிப்பாருங்கள், விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல ;)

Wednesday 28 November 2012

குலத்தொழில்

என்னடா இது, இந்த நாகரீக காலத்துல குலத்தொழில் பத்தி எல்லாம் பேசுறான் என்று நினைக்கிறீர்களா? சரி தான், இப்போது யாரும் தங்களது குலத்தொழிலை செய்வதில்லை. ஆனால், நம்மில் பலரும், தங்களையும் அறியாமல், தங்கள் குலத்தொழிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

கஷ்டம் வரும் போது கடவுளிடம் முறையிடு. ஆதாயம் கிடைக்கும் போது, அதில் கொஞ்சம் கடவுளுக்கு வழங்கு.

ஆமாம், நினைவில் கொள்ளுங்கள், 'உங்களுடைய குலத்தொழில், உங்கள்  கடவுளை வழிபடுவது'.

அன்று,  தந்தை, தன் பிள்ளையை தோளில் சுமந்து சென்று இறைவழிபாடு செய்தார். இன்று, அந்தப் பிள்ளை, அதன் குழந்தையை காரில் கூட்டிச் சென்று இறைவழிபாடு செய்கிறது. இதற்கிடையில் ஒரு இருபத்தைந்து வருடம் ஓடிவிடுகிறது. இந்த இருபத்தைந்து வருடத்தில், அந்த பிள்ளையின், படிப்பு, வேலை மற்றும் சமுதாயம் பற்றிய அறிவு இன்னும் பிற விசயங்கள் பற்றிய அறிவும் மகத்தாக வளர்ந்துவிடுகிறது. பாவம்,  அந்த பிள்ளைக்கு, தான் வழிபடும் கடவுளின் பால், நினைத்துப் பார்க்க, சிந்தனை செய்ய ஒரு நிமிடம் கூட கிடைக்க வில்லை. 

இங்கு, ஆதாயம் தரும் விசயங்களை மட்டுமே சிந்தனையாக ஏற்றுகொள்கிறார்கள். உதாரணத்துக்கு, இரவில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு, நட்சத்திரங்களிடம் பேசிக் கொண்டிருந்தால்.  வீட்டில், 'சரிதான், இவனுக்கு ஏதோ ஆய்டுச்சு' என முடிவு செய்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்த வரை கடவுளைப் பற்றிய சிந்தனையும் கிட்டத்தட்ட இந்த மாதிரி தேவையற்ற ஒன்று தான். இவற்றைப் பற்றி பேசுவதும், விவாதிப்பதும் அனாவசியமானது.

Monday 26 November 2012

மனித உயிர்

மனித உயிர், மனிதனின் மூளையில் உருவாகி, மூளையோடே  மரணம் எய்துகிறது. இதில் தான் எல்லாமும் (தாய், தந்தை, ஜாதி, மதம், கடவுள், உயிர் பற்றிய நம்பிக்கை, ஏனைய அனைத்தும்) இருக்கிறது.

அப்படியானால்,  பிறக்கும் போது, ஒரு குழந்தை - அது உயிர் இல்லையா?
இல்லை,  அதுவும் உயிர் தான். ஆனால், அது ஒரு புதிதாக தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கு போல. புதிதாக மாட்டப்பட்ட மெமோரி-கார்ட் போல.

மூளை செயல்படமால், உடல் உறுப்புகள் செயல்பட முடியாதா? அப்போது உயிர் இருக்காதா? செயல்படும். அப்போது மருத்துவர்கள்அந்த மனிதனை (அவரின்  உயிரை) காப்பாற்ற முயல்வதில்லை. அவரது உறுப்பைக்கொண்டு, வேறு ஒரு மனிதனின் உயிரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.

அந்த உறுப்புகள், ஒரு செயல்படாத கணினியின் கீ-போர்ட் போல. அந்த கீ-போர்டினால், அந்த கணினிக்கு எந்த பயனும் இல்லை.

ஒரு குழந்தை பிறந்தவுடன், வேறு ஒரு ஜாதி/மதம் பின்பற்றும், தாய் தந்தையால் வளர்க்கப்படுமேயானால், வேறு எந்த உதவியும் இல்லாமல், அந்த குழந்தையால், தன் உண்மையான தாய் தந்தையை கண்டு பிடிக்க முடியாது.அது தன்னுடைய, தற்போதைய நம்பிக்கைகளையே, தொடர்கிறது.

மேலே சொன்னது உண்மையென்றால், பிறக்கும் எந்த உயிரும், தாய், தந்தை, ஜாதி, மதம், கடவுள், உயிர் பற்றிய நம்பிக்கையை, அதன் சமூகத்தில் இருந்தே பெற்றுக்கொள்கிறது, இதுவும் உண்மை தான்.

இப்படிப் பிறரால்/சமூகத்தால், நம் மீது திணிக்கப்பட்ட ஒன்றை 'இது சரியா?' என கேள்விகேட்பது தவறா? ஒரு மனிதன், உங்களிடம் வந்து நான் தான் கடவுள் என்றால், அவனை கடவுளாக ஏற்றுக்கொள்ள, அவனுக்கு என்னவெல்லாம் பரீட்சை வைப்பீர்கள்? இதை எப்போதாவது உங்கள்/நீங்கள் நம்பும் கடவுளுக்கு வைத்திருப்பீர்களா? நமது நம்பிக்கையை சோதித்துப் பார்ப்பதில் என்ன தவறு?

இந்த விளக்கம்,உயிர் பற்றிய, உலகின் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறாது. இருந்தாலும், இது தான் என் விளக்கம்.

Tuesday 20 November 2012

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

இன்றும் நேற்றும், பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. சரி, நண்பர்களை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம் என்று  பேஸ் புக், கூகுள் +, ப்ளாக் என்று சுத்திக்கொண்டு இருந்தேன். அப்பொழுது என் கண்ணில் பட்டது "நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்". என்னால் நம்ப முடியவில்லை, ஆண்களுக்கு தினமா? இதைத் தொடர்ந்து "ஆண்கள் பாதுகாப்பு சங்கம்" என்ற அமைப்பு பற்றியும், அது பரபரப்பாக இயங்கி வருவதையும்  கேள்விப்பட நேர்ந்தது. ஆண்களுக்கு இந்த மாதிரி அமைப்புகள் தேவையா? ஒரு வேலை, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் கண்ணீர்க் கதையைக் கேட்டால், இந்த அமைப்புகளின் அவசியம் தெரியும்.

சில தினங்களுக்கு முன்பு தொலைக்கட்சியில், கம்பன் கழகம் சார்பில் நடத்தப்பட்ட சுழலும் சொல்லரங்கம் ஒளிபரப்பப்பட்டது. இதன் தலைப்பு, இராமாயணப் பெண்களின் அழகைப் பெரிதும் பறைசாற்றுவது அவர்களின் பாசமா, தியாகமா, உறுதிப்படா, கொடுங்குணமா, மதி நுட்பமா.

நடிகர் திரு.ரஜினிகாந்த்,  கலந்து கொண்டதால் அதை பார்க்கலாம் என்று சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் பேசுவார் என்று எதிர் பார்த்தேன், ஆனால் பேசவில்லை. ஆனால், நன்றாக நிகழ்ச்சியை ரசித்தார். 

சிறிது நேரத்திற்கெல்லாம், நான் அந்த நிகழ்ச்சியில் ஒன்றிப்போயிருந்தேன். அவர்கள் ஒவ்வொரு பாடலையும், அவரவர் பாணியில் விளக்கிக் கொண்டிருந்தனர்.  அங்கு பேசியவர்களில், திருமதி. பாரதி பாஸ்கர் தவிர யாரையும் தெரியவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் பெண்களே, நடுவர் திரு இலங்கை ஜெயராஜ் தவிர. ஒரு பெண்மணி, ராமாயண பெண்களின் மதி நுட்பம் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார், அவரிடம் நடுவர் திடீரென்று  ஒரு கேள்வி கேட்டார். "பெண்ணுக்கான பண்பு என்று நான்கு இருக்கிறது 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' இதில் 'மடம்' என்ன என்பதை விளக்க முடியுமா?" என்றார். அந்தப் பெண் சற்றே தடுமாறி, ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அதற்க்கு முன்னே நடுவர் விளக்கம் தர ஆரம்பித்துவிட்டார். "மடம்  என்றால் மடமை." என்று ஆரம்பித்து பல மேற்கோள்களைக்  காட்டி, பேச்சைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். 

அதன் முடிவில், "ஒரு பெண், அவளது கணவனை காட்டிலும் மிகுந்த அறிவாளியாக இருந்தால், அவளை, அவள் கணவனால் ரசிக்க முடியாது" என்றார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. மேலும் பெண்ணை,  தேவை இல்லாமல், நாகரீகம், புரட்சி என்ற பெயரில் அதிகம் படிக்க வைப்பதாகவும் வருத்தப்பட்டார். ஐந்து பெண்கள், அதுவும் பட்டிமன்ற பேச்சாளர்கள், சுற்றி அமர்ந்திருக்க, அவர் இப்படிச் சொன்ன போது, அவர்களின் முகங்கள் நன்றாகவே வாடிப் போயின. அவர்களால் என்ன செய்ய முடியும், அவை-நாகரீகம் கருதி அமைதி காத்தனர் என்றே கருதுகிறேன் 

முதலில் எனக்கே, நடுவரின் கருத்து மேல் உடன்பாடில்லை. 'இது என்ன பைத்தியக்காரத்தனம்' என்றே தோன்றியது. மேலும், மேலும் அவர்  கூறியதைப் பற்றி சிந்திக்கும் போது. திடீரென்று, அவர் சொன்னது சரி என்று பட்டது. நானா இப்படி ஒரு விஷயத்தை சரி என்று சொல்கிறேன்? எனக்கும் ஆச்சர்யம் தான். 

மனித சமுதாயம் பிழைத்துக்கிடக்க, இப்படி யாரவது ஒருவர் அடங்கி அல்லது பொருத்துப் போகத்தான் வேண்டும். இதில் பொதுவாக, சற்றே ஆணை விட உடல் வலிமை குறைந்த பெண் அடக்கி வைக்கப் படுகிறாள். இது அத்தியாவசியம் மேலும் எல்லா சமயங்களிலும் பெண் அடங்கிப்போவதில்லை. கணவனை இழந்த என் தாய், என்னையும், என் அண்ணனையும் அடக்கிவைத்தாள். இதில் ஆண், பெண் என்ற பேதமை எங்கே?  பட்டிமன்றங்களுக்கு எதற்காக நடுவர் இருக்கிறார்? அதைப்போலத் தான் இதுவும்.

என்னைப் பொறுத்தவரை, மனித இனம், தலைமை என்று ஒன்று இல்லாமல், எல்லாம்  சமமாகும் போது,  அழிவை நோக்கிச்செல்லும்.  

ஆமாம், எல்லா விலங்குகளிலும், ஆண் அப்படித்தானே இருக்கிறது, மனிதன் மட்டும் எந்த விசயத்தில் குறைந்தவன் ;)

Monday 5 November 2012

நாத்திகன்

கோவிலில் திருட்டு, காவல் துறையிடம் புகார்.

மக்கள் ஏன் இப்படி நாத்திகர்களாக மாறிவிட்டார்கள்?

Friday 26 October 2012

மேலும், கீழும்.

சில தினங்களுக்கு முன்பு, நான் குளித்துவிட்டு, துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு, குளியலறையில் இருந்து வெளியே வந்தேன்.


எனது மூன்றரை வயது மகள், என்னைப் பார்த்தவுடன் "டாடி... ஷேம், ஷேம் பப்பி ஷேம்..." என்றால். "ஹே...நான் தான் கீழ துண்டு கட்டி இருகேன்லே" என்றேன். "அப்பா, நான் கீழ 'ஷேம், ஷேம் பப்பி ஷேம்' சொல்லல, மேல தான் சொன்னேன்" என்றால். "நான் ஆம்பள பையன் தானே, பொண்ணுனா தான் மேல பப்பி ஷேம் சொல்லணும்" என்றேன். "ஏன்?" என்றால்.   சற்று நேர யோசனைக்குப் பின், இன்னொரு துண்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டேன். "இப்போ ஓகே வா?" என்றேன். "ம்ம்ம்...இப்ப தான் டாடி, குட் பாய்!" என்று என்னை கட்டிகொண்டாள்.

Friday 29 June 2012

பாத்திரம்

நான் அன்பைத் 
தருவதற்க்கென ஒரு  அட்சய பாத்திரத்தையும், 
பெருவதற்க்கென ஒரு ஓட்டைப் பாத்திரத்தையும் வைத்திருக்கிறேன். 
சாதாரண கண்களுக்கு, என்றுமே இவை தீர்வதோ, நிறைவதோ இல்லை.

Wednesday 27 June 2012

மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி

ஒன்பது நாட்கள் விடுப்பிற்குப் பிறகு, நேற்று தான் அலுவலகத்திற்கு வந்து பணிகளைத் துவக்கினேன். கடைசியாக, அதிக நாட்கள், நான் விரும்பி(!) விடுப்பெடுத்தது, என் திருமணத்தின் போது தான், மூன்று வாரங்கள். எங்க பொன்ப்ரியா பிறந்த போது கூட ஐந்து நாட்கள் தான் விடுப்பெடுத்தேன் (சனி, ஞாயிறு உட்பட). அப்பொழுது, நான் பணி புரிந்து கொண்டிருந்த அலுவலகத்தில், வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி இல்லை. தற்போதைய அலுவலகத்தில், அந்த வசதி உண்டு. இருந்தும் எனக்கு அது சரிப்படவில்லை.

சென்ற வாரம் முழுவதும், மதுரை மற்றும் அதன் சுற்று வாட்டர ஊர்களுக்கு செல்ல நேர்ந்தது. பொதுவாக, நான் மதுரைக்கு விடுமுறைக்குச் சென்றால், வீட்டை விட்டு எங்கும் செல்வது இல்லை. அதனால் தானோ, என்னவோ, எனக்கு ஊருக்கு செல்வதில் பெரிய ஆர்வம் இல்லை. இதுவும் கூட, நான் அடிக்கடி விடுப்பு எடுக்காததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த விடுமுறை அப்படி ஒரு சாதாரணமான அனுபவம் இல்லை.

சூன் 19, நாகர்கோவிலில் உள்ள, என் மனைவி மீனாவின் தோழிகளில் இருவரை சந்திப்பதற்காக, குடும்பத்துடன் சென்றோம். பெரிதாக ஊர் சுற்றவில்லை.இருந்தாலும், அவர்களுடன் தங்கியருந்த இரண்டு தினங்களும் மகிழ்ச்சியாகவே கழிந்தது.

சூன் 21, நண்பர் முத்துக்கண்ணன் - சுபத்ரா அவர்களின் திருமணத்திற்க்காக தூத்துக்குடிக்குச் சென்றிருந்தேன். என் குடும்பத்தாரை, நாகர்கோவிலில் இருக்க வைத்துவிட்டு, நான் மட்டும் தனியாகவே சென்றேன். நீண்ட நாட்களுக்கு பிறகு யாரோட கையையும் பிடித்துக்கொண்டு நடக்காமல், நானாக சில மணி நேரங்கள் இருக்க வாய்ப்பு கிடைத்தது.

நண்பர் முத்துக்கண்ணனை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். அதற்க்கு மேலும் அங்கு நண்பர் கணேஷ் அவரையும், திரு. செந்தில் அவர்களையும் சந்திக்க முடிந்தது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பும், அவரோடு நாகர்கோவில் வரை பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுடன் கேட்டது, பேசியது பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன். இதை முடிப்பதற்கே எனக்கு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

இந்த வாரம் திங்கள் கிழமை, நீண்ட விடுமுறைக்குப்பிறகு மீண்டும் பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவனைப் போல அழுதுகொண்டே அலுவலகம் வந்தேன்.

Monday 11 June 2012

நான்


நான் முரண்பாடுகளின் பிணைப்பாக இருக்கிறேன். ஒரு விசயத்தில் உள்ள நல்லதைப் பார்ப்பதை விட அதனால் விளையும் கேடுகளையே அதிகம் பார்க்கிறேன். நான் எரிச்சலின் உச்சியில் இருக்கிறேன். நான் ஒரு உருப்படாதவன். எனக்கு வாழத் தெரியாது, சாகவும் தெரியாது. எங்காவது ஓடி விடலாம் என்றால், குடும்பம் என்ன ஆகுமோ என்ற யோசனை. இங்கேயே இருக்கலாம் என்றால் நான் என்ன ஆவேனோ என்ற யோசனை.  

மனிதர்களுடன் பழகுவதே வேண்டாம் என்கிறது என் மூளை. இது சாத்தியம் இல்லை என்று சொல்கிறது என் மூளை. என் மூளையை எனக்குப் பிடிக்க வில்லை. சிந்தனை இல்லா மூளை இருந்தால் நன்றா இருக்குமோ? தெரியவில்லை. தீய பழக்கங்கள் என்று  அனைவராலும்   அழைக்கப்படும்  ஏதேனும் ஒன்றை பழகிக்கொள்ள வேண்டுமோ?  அது தரும் விசயங்களை சந்தோசம் என்று நினைத்து லயித்து கிடக்க வேண்டுமோ?

எனக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று யோசிக்க முடியவில்லை. எதுவுமே பிடிக்காதது போல இருக்கிறது, ஆனாலும் சில விசயங்களை கூர்ந்து பார்த்தால் அதில் உள்ள ஏதோ ஒன்று பிடிப்பது போலவும் இருக்கிறது. சாப்பிடுவது படிக்கும், முப்பது வருடமாக இதைத்தானே செய்கிறாய் என்ற எண்ணம் சாப்பாட்டை வெறுக்கச் செய்கிறது. என் குழந்தையை எனக்கு பிடிக்கும், இந்த குழந்தையை வளர்ப்பதற்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், எந்த மாதிரி ஒரு உலகில் இந்த குழந்தையை கொண்டு வரப்போகிறோம், என்ற எண்ணம் குழந்தையின் மகிழ்ச்சியை காணாமல் போய்விட செய்கிறது. 

நான் விதிகளை மதித்து நடக்கும் போது, அதன் விளைவுகளால் ஏற்படும் பதிப்பும், மற்றவர் விதிகளை மதித்து நடக்கும் போது, அவர்களின் நேர்மையும் எனக்கு தெரிகிறது. இவை எல்லாம் எனக்கு தெரிந்த போதும் என்னால் மாற்ற முடியவில்லை. இரவில், தனிமையில் அமர்ந்து வானத்தைப் பார்க்கும் போது, இந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு மிகச்சிறிய பூச்சி என்றே தோன்றுகிறது. இந்த பூச்சிக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமை, இந்த பிரபஞ்சத்தையே தன் தலையில் சுமப்பதைப்போல. எனக்கு மனநிலை சரி இல்லை, நான் எந்த விதிகளையும் மீறாத காரணத்தால், ஒரு கட்டுப்பாட்டில் உள்ள மன நிலை தவறியவனாகவே இருக்கிறேன். நான் கட்டுப்பாட்டை இழக்க வேண்டுமோ? என் மனம் சொல்லும் வழியில் செல்ல வேண்டுமோ? என் மனம், அது ஒரு ....

நான் நினைவுகளை இழந்தால், ஒரு நாள் நிம்மதியாக உறங்கலாம். 

Thursday 31 May 2012

15,30,40

நான் பெரிய புத்திசாலி இல்ல. ஆனாலும், என் சிந்தனையின் வீச்சை, என் எழுத்தில் கொண்டு வர முடியவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு சிந்தனை, அதன் மேல் மற்றொன்று, என்று எனது எண்ணம் பறக்கும். ஆனால், எழுதும் போதோ  ஒவ்வொரு வார்த்தையையும் முடிக்கும் முன், பல முறை அதே விசயத்தை யோசித்து, முன்னும் பின்னும் சரியாக உள்ளதா என்று பார்த்து,  மிகவும்  சிரமமாக உள்ளது. 
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு கட்டுரையாக எழுத வேண்டிய "வாழ்க்கை"  பதிவை "கேள்வி - பதில்" வடிவில் வைத்ததன் முக்கியமான காரணம் இதுவே. 
மேலும் ஒரு விசயத்தை, ஒரு முறை யோசித்த  பின், அதை பதிவு  செய்ய  வேண்டும்  என்கிற  எண்ணம் வருவதில்லை. 
என்ன தான் நியாயமான  பல காரணங்கள் சொன்னாலும், உண்மையில், ஒரு சோம்பேறித்தனமே மேலோங்கி இருக்கிறது. அதனால் ஒவ்வொரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு பதிவிட வேண்டும் என்று இதை ஆரம்பிக்கிறேன். 
15-30-40
இரண்டு நாட்களுக்கு முன்பு, தற்செயலாக டென்னிஸ் பார்க்க நேர்ந்தது. இதற்க்கு முன்னும் டென்னிஸ் மேட்ச் பார்த்திருக்கிறேன், இருந்தாலும் திடீரென்று ஒரு கேள்வி. ஏன் இவர்கள் 15-30-40 என்று புள்ளிகள் கொடுக்கிறார்கள்? 1-2-3 என்று கொடுக்கலாமே?
இதற்கான பதிலை இங்கு சென்று அறிந்து கொண்டேன். சரி ஆரம்பம் தான் அப்படி பயன்படுத்தினார்கள், இப்போது ஏன்? அனாவசியமாக ஒரு எழுத்தில் முடிக்க வேண்டிய விசயத்தை இரண்டு எழுத்தில் காட்டுகிறார்கள். எந்த ஒரு விசயமும், வாழைப்பழத்தில் பத்தியை நிக்க வைத்து வழிபாடு செய்வது மாதிரி மிக மிக சிறிய விசயமாகவே இருந்தாலும் கூட, மாற்றுவதற்கு ஒரு தைரியம் தேவைப்படுகிறது.