Monday 11 June 2012

நான்


நான் முரண்பாடுகளின் பிணைப்பாக இருக்கிறேன். ஒரு விசயத்தில் உள்ள நல்லதைப் பார்ப்பதை விட அதனால் விளையும் கேடுகளையே அதிகம் பார்க்கிறேன். நான் எரிச்சலின் உச்சியில் இருக்கிறேன். நான் ஒரு உருப்படாதவன். எனக்கு வாழத் தெரியாது, சாகவும் தெரியாது. எங்காவது ஓடி விடலாம் என்றால், குடும்பம் என்ன ஆகுமோ என்ற யோசனை. இங்கேயே இருக்கலாம் என்றால் நான் என்ன ஆவேனோ என்ற யோசனை.  

மனிதர்களுடன் பழகுவதே வேண்டாம் என்கிறது என் மூளை. இது சாத்தியம் இல்லை என்று சொல்கிறது என் மூளை. என் மூளையை எனக்குப் பிடிக்க வில்லை. சிந்தனை இல்லா மூளை இருந்தால் நன்றா இருக்குமோ? தெரியவில்லை. தீய பழக்கங்கள் என்று  அனைவராலும்   அழைக்கப்படும்  ஏதேனும் ஒன்றை பழகிக்கொள்ள வேண்டுமோ?  அது தரும் விசயங்களை சந்தோசம் என்று நினைத்து லயித்து கிடக்க வேண்டுமோ?

எனக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று யோசிக்க முடியவில்லை. எதுவுமே பிடிக்காதது போல இருக்கிறது, ஆனாலும் சில விசயங்களை கூர்ந்து பார்த்தால் அதில் உள்ள ஏதோ ஒன்று பிடிப்பது போலவும் இருக்கிறது. சாப்பிடுவது படிக்கும், முப்பது வருடமாக இதைத்தானே செய்கிறாய் என்ற எண்ணம் சாப்பாட்டை வெறுக்கச் செய்கிறது. என் குழந்தையை எனக்கு பிடிக்கும், இந்த குழந்தையை வளர்ப்பதற்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், எந்த மாதிரி ஒரு உலகில் இந்த குழந்தையை கொண்டு வரப்போகிறோம், என்ற எண்ணம் குழந்தையின் மகிழ்ச்சியை காணாமல் போய்விட செய்கிறது. 

நான் விதிகளை மதித்து நடக்கும் போது, அதன் விளைவுகளால் ஏற்படும் பதிப்பும், மற்றவர் விதிகளை மதித்து நடக்கும் போது, அவர்களின் நேர்மையும் எனக்கு தெரிகிறது. இவை எல்லாம் எனக்கு தெரிந்த போதும் என்னால் மாற்ற முடியவில்லை. இரவில், தனிமையில் அமர்ந்து வானத்தைப் பார்க்கும் போது, இந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு மிகச்சிறிய பூச்சி என்றே தோன்றுகிறது. இந்த பூச்சிக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமை, இந்த பிரபஞ்சத்தையே தன் தலையில் சுமப்பதைப்போல. எனக்கு மனநிலை சரி இல்லை, நான் எந்த விதிகளையும் மீறாத காரணத்தால், ஒரு கட்டுப்பாட்டில் உள்ள மன நிலை தவறியவனாகவே இருக்கிறேன். நான் கட்டுப்பாட்டை இழக்க வேண்டுமோ? என் மனம் சொல்லும் வழியில் செல்ல வேண்டுமோ? என் மனம், அது ஒரு ....

நான் நினைவுகளை இழந்தால், ஒரு நாள் நிம்மதியாக உறங்கலாம். 

3 comments:

  1. உடனடியாக மனதுக்கு வருவது க.நா.சு எழுதிய 'பொய்த்தேவு' மற்றும் ஜெயமோகன் எழுதிய 'பின்தொடரும் நிழலின் குரல்'. இரண்டிலுமே இதுபோன்ற கேள்விகளுக்கு எனக்கான விடை இருந்தது.

    ReplyDelete
  2. அடுத்த வாரம் ஊருக்கு வந்து இந்த புத்தகங்களை வாங்கி படிக்கிறேன்.

    எனக்கு ஏதோ ஒரு மனநல மருத்துவரை சந்தித்து விளக்கம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இருந்தாலும் இந்த முடிவிற்கு, வீட்டில் கிடைக்கப்போகும் மரியாதை எனக்கு நன்றாக தெரியும். பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மருத்துவரைப் பார்ப்பது ஆறுதல் தருமென்றால் நிச்சயம் செய்யுங்கள். ஆனால் பொதுவாக மக்கள் நினைப்பது மாதிரி அவர்கள் ஒன்றும் பெரிய புத்திசாலிகள் கிடையாது. பெரும்பாலானவர்கள் மேற்கத்திய மனோதத்துவம் படித்தவர்கள். இந்திய மனம் மேற்கத்திய மனத்திலிருந்து பலவகைகளில் வேறுபட்டது. அவர்கள் புத்தகங்களில் படித்ததைக் கிளிப்பிள்ளை மாதிரி சொல்வதைக் கேட்பதில் நமக்கு என்ன பெரிய பிரயோஜனம் இருக்கப் போகிறது?

      Landmark Education என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. http://en.wikipedia.org/wiki/Landmark_Education. இங்கு நடக்கும் முதல் கட்ட அறிமுகத்துக்குச் சென்று வருவது அதிக பயனளிக்கும் என்பது என் கருத்து. என் தோழி ஒருத்திக்கு அங்கிருப்பவர்கள் பழக்கம். ஒருவரது ஃபோன் நம்பர் வாங்கி உங்களுக்கு அனுப்புகிறேன். அவர்களிடம் பேசிப் பாருங்கள்.

      Delete