Wednesday 2 November 2011

என் "ஏழாம் அறிவு"

இந்த பதிவில், "ஏழாம் அறிவு" திரைப்படம் பற்றிய எனது சிந்தனைகள்
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படம் பார்த்துவிட்டு பதிவை தொடரவும்.

ஏனோ தெரியவில்லை, இந்த படம் பரபரப்பாக பேசப்பட்ட நாட்களில் இருந்தே இந்த படம் தோல்வி அடைய வேண்டும் என என் மனம் விரும்பியது. ஆனால், படம் பார்த்த போது, இந்த படக்குழுவின் மீது பரிதாபம் தான் தோன்றியது. இந்த படம், உறுதியாக ஒரு குப்பை படம் இல்லை. நான்  "டைம்" படம் பார்த்திருக்கிறேன். இது லாஜிக் பார்க்ககூடாத ஒரு தமிழ் பற்றுள்ள மசாலா படம்.

படம் பார்க்கும் முன்னே, முதல் 15  நிமிடங்கள் வரும் காட்சிகள் நன்றாக
இருக்கும் என்றார்கள், எனக்கு அதுவும் பிடிக்க வில்லை.

இந்த படம் செய்த ஒரே நல்ல விஷயம் "போதி தர்மர்"-ங்கிற ஒரு மனிதனை,
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து விட்டார்கள்.

ஆனால், அவரு காத்த வசியம் பண்ணுவாரு, தீய வசியம் பண்ணுவாரு, மனுசங்கள வசியம் பண்ணுவாரு, அப்படி இப்படின்னு, அவரை  ஒரு மந்திரவாதி மாதிரி காட்டி இருக்கிறார்கள்.

தற்காப்புக் கலைகள் வரைக்கும் சரி, கைகளைச் சுழற்றி மண்ணில் உள்ள புழுதியைக் கொண்டு ஒரு புழுதிப் புயலையே உருவாக்குவது, எந்த விதத்திலும் படத்துக்கோ, கதைக்கோ உதவ வில்லை.

சூர்யா, சிக்ஸ் பேக் காட்டுறாரு. இவரு பண்ண சண்டைக்கு பயிற்சி வேற.
அப்படி ஒன்னும் பிரமாதமா இல்ல.

ஸ்ருதி, அழகா இருக்காங்க. நல்ல குரல், நல்லா தமிழ் உச்சரிக்கிறாங்க.
தமிழ் பேசும் போது, வார்த்தைகளை கடிச்சு கடிச்சு பேசுற மாதிரி இருக்கு,
ஆனாலும் நல்லா தான் இருக்கு ;D

வில்லன், இவர இப்படியே கூப்பிடுவோம். இவர் இன்னும் ஒரு தேவை இல்லாத செலவு படத்துக்கு. இவர் சண்டை போட்டத விட, "நந்தா சூர்யா" மாதிரி தலையை சொளட்டி சொளட்டி பாக்குறது தான் அதிகம். அதையும் ஒழுங்கா செய்ய மாட்டுறார். இதுக்கு சூர்யாவையே போட்டு இருக்கலாம்.  வில்லன் போடுற சண்டையை விட பல மடங்கு பிரமாதமா நம்ம "மானாட மயிலாட" டீம் செய்வாங்க.

இசை ஓகே, பின்னணி இசை நல்லா இல்லை.

இயக்குனர், இவர் மேல எனக்கு எப்பவுமே மரியாதை கிடையாது. இந்த படத்துக்கு அப்புறமும் அதே நிலையில் தான் இருக்கார். கதை, திரைக்கதை மிக மிக சாதாரணம்.

சீனா - ஒரு நோய பரப்பி இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர
முயற்சிக்குது, அதுவும் ஒரே ஒரு மனிதனை இந்தியாவுக்கு அனுப்பி.
ஏன் இதையே, அமெரிக்காவுல செய்ய வேண்டியது தானே? எதுக்கு இந்தியா? எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.

சரி, அவ்வளவு கஷ்டப்பட்டு போதி தருமருக்கு மருந்து தெரிஞ்ச கிருமிய
கண்டுபிடிக்காம, போதி தருமருக்கு மருந்து தெரியாத ஒரு கிருமிய கண்டு
பிடிக்கிறது தானே?

அப்படியே ஒரு நோய் பரவினாலும், இந்தியா மாதிரி ஒரு நாடு, மூணு மாசத்துல முப்பது லட்சம் பேரையா பலி கொடுக்கும். தடுப்பு நடவடிக்கை செய்யாதா?  WHO என்ன பண்ணும்? இந்தியாவுல நோய் வந்தா, உலகத்துல எல்லா நாட்டுக்கும் தானே இந்த நோய் வரும்? மருத்துவர்கள் விஞ்ஞானிகள் எல்லாம் புளியங்கா பறிச்சுகிட்டா இருப்பாங்க?

என்ன தான் ஹிப்னாடிசம்-னு சொன்னாலும், பார்த்த செகண்ட்-லையே ஒரு மனுஷன் வில்லனுக்கு அடிமையாகுறதும், அவர் கண்களை விட்டு அகன்ற பின்னும் அவரின் அடிமையாகவே  செயல்படுவதும். இப்படி ஒரு மனுஷன் இருந்தா, ஒபாமா-வ அடிமையாக்குறது தானே? இந்திய பிரதமரையே சீனாவுக்கு வரச்சொல்லி, அவருக்கே ஊசி போட்டு அனுப்பி இருக்கலாம்.  தேவையில்லாம நாய்களை வேற கஷ்டப்படுத்திக்கிட்டு.

ஆமா, நாய்க்கு ஊசி போடுறதுக்கு எதுக்கு எக்ஸ்-ரே கண்ணாடி? அப்படி கிராபிக்ஸ்-க்காக செலவு பண்ணித்தான் ஆகணும்னா, கிருமிகள் நாய்க்குள்ள போற மாதிரியாவது காட்டி இருக்கலாம்.

வில்லனால, ஏனோ சூரியாவை மட்டும் ஹிப்னாடிசம் செய்து வசியம் பண்ண
முடியவில்லை. அது சூரியா DNA 80 சதவிகிதம் போதி தர்மரோட DNA வோட ஒத்து போரதாலையா? இல்ல சூர்யா ஹீரோ-ன்றதாலையா? ஒரு கூலிங் கிளாஸ் போட்டா வில்லன் கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு ஒரு கதை சொல்லிருக்கலாம், இதை விட நல்லா இருந்து இருக்கும்.

இந்த கதையோட ஆணிவேர் DNA. இதையே இவங்க ஒழுங்கா புரிஞ்சுகிட்டாங்கலான்னு தெரியல. ஜெனடிக் மெமரி- இதை வைத்து ஒரு மனிதனை போல இன்னொரு மனிதனை உருவாக்கலாம் ஆனால் இருவருக்கும் மூளை வேறு அதனால் நினைவுகளும்
வேறாகத்தான் இருக்க முடியும். அதாவது எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு DNA வுக்கு, எப்படி நான் மூளையில் பதிய  வைத்த அல்லது கற்றுக்கொண்ட விஷயங்கள் தெரிந்து இருக்க முடியும்?

அதுவும் போக முடியில், நகத்தில், எலும்பில், முதுகெலும்பில் என உடம்பின்
ஒவ்வொரு செல்லிலும் நிறைந்து இருக்கும் DNA வை மாற்றுவது? அதுவும்
வளர்ந்த ஒரு ஆணுக்கு? இதுக்கு அவனிடம் இருந்து ஒரு DNA வை எடுத்து அதை மாற்றி அதன் மூலம் போதி தர்மர் போன்ற ஒரு க்ளோன் உருவாக்கினோம்ன்னு சொல்லி இருக்கலாம்.

எனக்கும் DNA-பத்தி முழுசா தெரியாது. ஆனா இது முடியாதுன்னு மட்டும் தெரியும். இவங்க கொறஞ்ச பட்சம், கதை நடைபெறும் இடம் ஒரு பெரிய ஆய்வகம், 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்த, முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இடம்னு சொல்லி இருக்கலாம். அப்படி இருந்தால், பார்வையாளனுக்கு தெரியாத இடங்களையும் ஒரு த்ரில்லர் அனுபவத்தையும் கொடுத்து இருக்கலாம்.

இந்த கதைக்கு ஏன் "ஏழாம் அறிவு" னு பேர் வச்சாங்க? இல்லாத ஒன்னு-னு சொல்ல வாரங்களோ? இல்ல, நீ ஏழாம் அறிவ பயன்படுத்தி யோசிச்சா கூட இத புரிஞ்சுக்க முடியாதுன்னு சொல்லறாங்களா? எது எப்படியோ, நான் நினைச்சது நடந்துருச்சு.

உண்மையில், இந்த படைப்பு, தமிழனின் சிந்தனையில் தெளிவின்மையையே
காட்டுகிறது.  இதில் கர்வப்பட ஏதும் இல்லை.

Tuesday 18 October 2011

திருமூலரும் நானும்

'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' - திருமூலர்


பரவாயில்லையே, பல வருசங்களுக்கு முன்னாடியே,  நம்மல போல ஒருத்தர் 
யோசிச்சு இருக்காரேன்னு சந்தோசமா இருக்கு. திருமூலர், உயிர் பற்றி என்ன கருத்து வைத்திருந்தார் என்று எனக்கு சரியாக தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உடம்பே உயிர். தேவைகளை தீர்த்துக்கொள்ளும் உடல், உயிருடன் இருப்பதாக அறியப்படுகிறது. உயிர் பிரிவதன் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட, உடலின் பாகங்கள் செயல் இழப்பதால் தான். வேறு காரணங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ஆண்டாண்டு காலமாக இருக்கும் உயிர்/உயிர் சுழற்சி/மறு பிறப்பு/இன்னும் பல உயிர் சார்ந்த நம்பிக்கைகளை, பொய்/இல்லை என்று கூறும் போது யாராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது தான். முதன் முதலில், பூமி "கோள" வடிவுடையது என்று கூறிய போது, யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் தான். ஆனால், சில காலத்தில் பூமியின் வடிவை நிருபிக்கும் முயற்சியில் வெற்றி அடைந்து எல்லோரையும் நம்பவும் வைத்து விட்டார்கள். அதுபோல "உடம்பு=உயிர்" இந்த விதியை , நிரூபிக்கும் எந்த ஒரு சோதனையும் என்னிடம் இல்லை. நான் நிரூபிக்க ஆசைப் படவுமில்லை. நான் அறிந்தது என் மட்டும். நானே(வேறு எங்கும் இருந்து இல்லாமல்) உணரும் சில விஷயங்கள், நிரூபிக்கப்படவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது இல்லை.

ஆனால் என் வாழ்நாள் முழுவதும் நடக்கும் சம்பவங்களின் மீது இந்த விதி சோதனைக்குட்படுத்தப்படும். என்றாவது ஒரு நாள், என் சோதனையின் முடிவு மாறும் பட்சத்தில். அந்த சோதனையும் அதனால் அறியப்படும் விவரங்களும் இங்கே விலாவாரியாக பதிவு செய்யப்படும்.
 
கொஞ்சம் நான்-சென்ஸ்:
 
உறுப்பு - இது ஒரு செல்லாகவும் இருக்கலாம், செல்லை விட சிரிதானதாகவும் இருக்கலாம்.
உடம்பின் உறுப்புகளை மாற்றுவதன் மூலம், மனிதன் சாகாமலே இருக்க முடியும்.
மூப்படைவது? இதற்கும் ஏதோ ஒரு செல்லோ அல்லது உறுப்போ தான் காரணமாக இருக்க வேண்டும். இது மிகவும் சிறியதாக இருக்கலாம், மிகவும் அதிகமாக இருக்கலாம். ஆனால் அறிவியல் வளர்ச்சி, அதையும் சாதிக்கும்.
இப்போ - "வந்தவரெல்லாம் தங்கி விட்டால்...இந்த மண்ணில் நமக்கே இடமேது?" - எல்லாருமா சேர்ந்து கிரகம் கிரகமா இடம் தேடி அலைய வேண்டியது தான். டைம் தான் இருக்கே ;)

Thursday 13 October 2011

அசைவ உணவு, தட்டான் பூச்சி, பருப்பு நண்பர்

ரெண்டு மாசம் இருக்கும், அசைவ உணவு சாப்பிடுறத நிறுத்திட்டேன்.
நான் இதை யார் கிட்டயாவது சொன்னா, உடனே "ஏன்?" னு கேக்குறாங்க.
என்னோட பதில்: ஏன் சாப்பிடனும்?
எனக்கு வேற ஒன்னும் பதில் தெரியல. "Survival of the fittest" "EcoSystem Balance" இப்படி என்னென்னமோ சொல்றாங்க. நான் இதை யாருக்காகவும் செய்யல, என்னோட சந்தோசத்துக்காக தான் செய்றேன்.

ஒரு காலத்துல, வெளக்கமாத்துக் குச்சியால, தட்டான் பூச்சிய வெரட்டி வெரட்டி வேட்டையாடி இருக்கேன். நேத்து, வண்டில மோத வந்த தட்டான் பூச்சிக்காக, வண்டிய சடன் ப்ரேக் போட்டு நிறுத்திட்டேன்.  அப்ப, கொஞ்சம் லூசுத்தனமா இருந்தாலும், கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.
 
இன்னும் ஒரு முக்கியமான விஷயம். என்னுடன் வேலை செய்ற ஒரு நண்பர். அவர் எப்போ பார்த்தாலும் ஏதோ பெரிய சாதனை செஞ்ச/பருப்பு மாதிரி தான் பேசுவார். நான் எப்பவுமே, யாரோட மனசும் புண்படகூடாதுன்னு கொஞ்சம் (இல்ல ரொம்பவே) அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போற டைப். திடீர்னு நேத்து, அவர் ஏதோ ஆரம்பிக்க, நான் பாட்டுக்கு, என் மனசுல தோணுனத பேசிட்டேன் (கிட்ட தட்ட நீ என்ன பெரிய புடுங்கியா ரேஞ்சு). அவர் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார்னு நினைக்கிறேன், அதுக்கு அப்புறம் அவர் பேசும் போது ஒரு தயக்கம் இருந்துச்சு. இதை ஏன் செஞ்சேன்? மறுபடியும், என் கிட்ட எந்த ஒரு பதிலும் இல்ல.
 
கொஞ்ச நேரத்துல, அவரும் எதுவும் நடந்த மாதிரி காட்டிக்கல, நானும் காட்டிக்கல. நான் மறுபடியும் என்னோட அட்ஜஸ்ட் டைப்க்கு திரும்பிட்டேன், அவரும் பருப்பு டைப்புக்கு திரும்பிட்டார்.
 
இப்பெல்லாம், நான் செய்ற பல விஷயங்கள், நான் செய்ற மாதிரியே தெரியல. ம்ம்..பார்க்கலாம் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதுன்னு.

Thursday 29 September 2011

மீசை


நீண்ட நாட்களுக்குப் பிறகு, வேலை பளு குறைவாக இருந்த சமயத்தில், நண்பர் ஒருவரின் buzz -க்கு பின்னூட்டம் போட்டுக்கொண்டிருந்தேன்.  அப்போது "மீசை" பற்றிய பேச்சு வந்தது. உடனடியாக என் நினைவுக்கு வந்தது "தில்லு முள்ளு" தான். ஒரு ஆண்மகனக்கு, அதுவும் தமிழ் நாட்டில் பிறந்த ஒருவனுக்கு, மீசை எவ்வளவு முக்கியமானது என்பதை ரஜினி மீசையை எடுக்க அழும் காட்சியில் உணரலாம். 


பொதுவாக, சின்ன வயசில், மீசை மீது கை வைப்பது என்பது, கிட்டத்தட்ட நமது சமுதாயத்துக்கு, குறைந்த பட்சம் நமது குடும்பத்துக்கு, சவால் விடும் ஒரு செயலாகவே கருதப்படுகிறது. ஏன், வளர்ந்து பெரிய ஆள் அனா பிறகும் கூட, "என் மீசை, நான் எடுக்கிறேன் ...எவன் என்ன சொல்லுவான்" இப்படி வீர வசனம் பேசலாம். ஆனா சவரக்கத்தி மீசை கிட்ட போகும் போது வருமே ஒரு பூகம்பம். நாளைக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கு அது முடிஞ்சா அப்புறம் எடுக்கலாமே? வாரக்கடைசில எடுக்கலாம், அப்போ தான் சனி, ஞாயிறு-குள்ள கொஞ்சமாவது வளந்துரும். இப்படி ஆள்ஆளுக்கு ஒரு சாக்கு சொல்லி, மீசை அறுவடைக்கான நாளை ஒத்திப்போடுவோம். இதுலே மீசையை வெற்றி கொள்கிற, வெற்றி வீரனும் இருக்கத்தான் செய்றான். நான் அந்த கட்சி இல்லப்பா.

நானும் மீசையை எடுத்து இருக்கிறேன் (ஆனா இது ஒரு வெற்றிக்கதை இல்ல). எப்போ? ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும் போது. அப்போ, ரெடி சேவர்-னு சொல்லக்கூடிய சவரக்கத்தி எனக்கு தெரிந்து இருக்க வில்லை. அது வரை, எனக்கு தெரிந்த சவரக்கத்தி, தனித் தனியாக இருக்கும் பாகங்களை ஒன்று சேர்த்து உருவாக்குவது மட்டுமே. அதுவும் பார்த்தது தான், பயன் படுத்த வேண்டிய அவசியம் எதுவும் வரவில்லை. 

அந்த சமயத்தில் நாங்கள், வரிசையாக வீடுகளை கொண்ட, வாடகைக்கு விடும் எண்ணத்தோடு கட்டப்பட்ட, தொகுப்பு வீடுகள் ஒன்றில் வசித்து வந்தோம். சொல்லப்போனால் ஒரு வீட்டுக்குத் தான் வாடகை கொடுத்தோம், ஆனால் எல்லா வீட்டிலும் தங்கினோம். அடுத்தவர்களின் வீட்டுக்குள் நுழைகிறோம் என்ற நினைவோ, உறுத்தலோ, அங்கு வசிக்கும் எவருக்கும் இல்லைஜாதி, மதம் தாண்டி எல்லோரையும் மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா என்று உறவும் பாராட்டி இருக்கிறோம். வீடுகள் அடைத்து பார்ப்பதே மிகவும் அரிது. இரவு நேரங்களில், எல்லாரும் முற்றத்தில் கூடி உணவு உண்டும், கதை சொல்லியும், கேலி பேசியும் இருந்திருக்கிறோம். 

அப்படி ஒரு பக்கத்துக்கு வீட்டில் தான், அந்த ரெடி சேவர், முதல் முறையாக, கைக்கு எட்டும் தொலைவில் பார்த்தேன். கண்டிப்பாக அது பயன் படுத்திய ஒன்று தான். அப்போ என்கிட்டே யாரவது 'ஹைஜீன்'-னு கேட்டா, அது யாரவது கிறிஸ்துவ சாமியா இருக்கும் னு பதில் சொல்லி இருப்பேன். எவரும் வருவதற்குள் செய்ய வேண்டும். ஆனால் எங்கே செய்வது? கையில் செய்தேன், நன்றாக வேலை செய்தது. எனக்கு ஒரே சந்தோஷம், அடுத்த கட்டத்துக்கு போக முடிவு எடுத்துவிட்டேன். கண்ணாடிய பார்த்தேன், முகத்துல மீசையோ தாடியோ வளர்வதற்க்கான அறிகுறி கூட தெரிய வில்லை. அதுனால என்ன, ஆரம்பம் ஆனது, ஒரு நிமிடம் கூட இருந்து இருக்காது, வேலை முடிந்தது. இப்போது கண்ணாடி பார்த்தால் முகத்தில் ஒரு மாற்றம். பயமா தான் இருந்தது, இருந்தாலும் ம்ம்..இதெல்லாம் யாருக்கு தெரியப்போகுது, மனதை தேத்திக்கொண்டேன். 

அம்மா, வீட்டிற்கு வந்தவுடன் கேட்டுவிட்டார், "ஏலேய்..மூஞ்சில என்னடா செஞ்சு வச்சுருக்க?". ஆரம்பம் அங்க தான், ஆனா அம்மா பல படிகள் மேலே ஏறி விட்டார் - அடி துவைத்து எடுத்துவிட்டார். அது நான் மீசையை எடுத்ததுக்காக இருக்காது என்று இப்போது உணர முடிகிறது. அது தான் முதல் முறை, அதன் பிறகு, மீசை எடுத்தது, அம்மாவின் இறுதிச்சடங்கின் போது தான். அது வரை என்னுடன் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த, என் அண்ணன் மகன்,  அதன் பிறகு, என் கிட்ட கூட வரவில்லை. ஆமா, மொட்டை தலை, மூஞ்சில வேற முடியே இல்லை, திடீர்னு பார்த்தா, எங்க வீட்டு பெருசுகளுக்கே என்னை அடையாளம் தெரியாது, அவன் என்ன பண்ணுவான்... அப்புறம் ஒரு மூணு மணி நேரத்துல, எங்கிட்ட ஒட்டிகிட்டான்.

மீசை நினைவுகளை இதோடு நிறுத்திக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்.