Thursday, 29 September 2011

மீசை


நீண்ட நாட்களுக்குப் பிறகு, வேலை பளு குறைவாக இருந்த சமயத்தில், நண்பர் ஒருவரின் buzz -க்கு பின்னூட்டம் போட்டுக்கொண்டிருந்தேன்.  அப்போது "மீசை" பற்றிய பேச்சு வந்தது. உடனடியாக என் நினைவுக்கு வந்தது "தில்லு முள்ளு" தான். ஒரு ஆண்மகனக்கு, அதுவும் தமிழ் நாட்டில் பிறந்த ஒருவனுக்கு, மீசை எவ்வளவு முக்கியமானது என்பதை ரஜினி மீசையை எடுக்க அழும் காட்சியில் உணரலாம். 


பொதுவாக, சின்ன வயசில், மீசை மீது கை வைப்பது என்பது, கிட்டத்தட்ட நமது சமுதாயத்துக்கு, குறைந்த பட்சம் நமது குடும்பத்துக்கு, சவால் விடும் ஒரு செயலாகவே கருதப்படுகிறது. ஏன், வளர்ந்து பெரிய ஆள் அனா பிறகும் கூட, "என் மீசை, நான் எடுக்கிறேன் ...எவன் என்ன சொல்லுவான்" இப்படி வீர வசனம் பேசலாம். ஆனா சவரக்கத்தி மீசை கிட்ட போகும் போது வருமே ஒரு பூகம்பம். நாளைக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கு அது முடிஞ்சா அப்புறம் எடுக்கலாமே? வாரக்கடைசில எடுக்கலாம், அப்போ தான் சனி, ஞாயிறு-குள்ள கொஞ்சமாவது வளந்துரும். இப்படி ஆள்ஆளுக்கு ஒரு சாக்கு சொல்லி, மீசை அறுவடைக்கான நாளை ஒத்திப்போடுவோம். இதுலே மீசையை வெற்றி கொள்கிற, வெற்றி வீரனும் இருக்கத்தான் செய்றான். நான் அந்த கட்சி இல்லப்பா.

நானும் மீசையை எடுத்து இருக்கிறேன் (ஆனா இது ஒரு வெற்றிக்கதை இல்ல). எப்போ? ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும் போது. அப்போ, ரெடி சேவர்-னு சொல்லக்கூடிய சவரக்கத்தி எனக்கு தெரிந்து இருக்க வில்லை. அது வரை, எனக்கு தெரிந்த சவரக்கத்தி, தனித் தனியாக இருக்கும் பாகங்களை ஒன்று சேர்த்து உருவாக்குவது மட்டுமே. அதுவும் பார்த்தது தான், பயன் படுத்த வேண்டிய அவசியம் எதுவும் வரவில்லை. 

அந்த சமயத்தில் நாங்கள், வரிசையாக வீடுகளை கொண்ட, வாடகைக்கு விடும் எண்ணத்தோடு கட்டப்பட்ட, தொகுப்பு வீடுகள் ஒன்றில் வசித்து வந்தோம். சொல்லப்போனால் ஒரு வீட்டுக்குத் தான் வாடகை கொடுத்தோம், ஆனால் எல்லா வீட்டிலும் தங்கினோம். அடுத்தவர்களின் வீட்டுக்குள் நுழைகிறோம் என்ற நினைவோ, உறுத்தலோ, அங்கு வசிக்கும் எவருக்கும் இல்லைஜாதி, மதம் தாண்டி எல்லோரையும் மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா என்று உறவும் பாராட்டி இருக்கிறோம். வீடுகள் அடைத்து பார்ப்பதே மிகவும் அரிது. இரவு நேரங்களில், எல்லாரும் முற்றத்தில் கூடி உணவு உண்டும், கதை சொல்லியும், கேலி பேசியும் இருந்திருக்கிறோம். 

அப்படி ஒரு பக்கத்துக்கு வீட்டில் தான், அந்த ரெடி சேவர், முதல் முறையாக, கைக்கு எட்டும் தொலைவில் பார்த்தேன். கண்டிப்பாக அது பயன் படுத்திய ஒன்று தான். அப்போ என்கிட்டே யாரவது 'ஹைஜீன்'-னு கேட்டா, அது யாரவது கிறிஸ்துவ சாமியா இருக்கும் னு பதில் சொல்லி இருப்பேன். எவரும் வருவதற்குள் செய்ய வேண்டும். ஆனால் எங்கே செய்வது? கையில் செய்தேன், நன்றாக வேலை செய்தது. எனக்கு ஒரே சந்தோஷம், அடுத்த கட்டத்துக்கு போக முடிவு எடுத்துவிட்டேன். கண்ணாடிய பார்த்தேன், முகத்துல மீசையோ தாடியோ வளர்வதற்க்கான அறிகுறி கூட தெரிய வில்லை. அதுனால என்ன, ஆரம்பம் ஆனது, ஒரு நிமிடம் கூட இருந்து இருக்காது, வேலை முடிந்தது. இப்போது கண்ணாடி பார்த்தால் முகத்தில் ஒரு மாற்றம். பயமா தான் இருந்தது, இருந்தாலும் ம்ம்..இதெல்லாம் யாருக்கு தெரியப்போகுது, மனதை தேத்திக்கொண்டேன். 

அம்மா, வீட்டிற்கு வந்தவுடன் கேட்டுவிட்டார், "ஏலேய்..மூஞ்சில என்னடா செஞ்சு வச்சுருக்க?". ஆரம்பம் அங்க தான், ஆனா அம்மா பல படிகள் மேலே ஏறி விட்டார் - அடி துவைத்து எடுத்துவிட்டார். அது நான் மீசையை எடுத்ததுக்காக இருக்காது என்று இப்போது உணர முடிகிறது. அது தான் முதல் முறை, அதன் பிறகு, மீசை எடுத்தது, அம்மாவின் இறுதிச்சடங்கின் போது தான். அது வரை என்னுடன் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த, என் அண்ணன் மகன்,  அதன் பிறகு, என் கிட்ட கூட வரவில்லை. ஆமா, மொட்டை தலை, மூஞ்சில வேற முடியே இல்லை, திடீர்னு பார்த்தா, எங்க வீட்டு பெருசுகளுக்கே என்னை அடையாளம் தெரியாது, அவன் என்ன பண்ணுவான்... அப்புறம் ஒரு மூணு மணி நேரத்துல, எங்கிட்ட ஒட்டிகிட்டான்.

மீசை நினைவுகளை இதோடு நிறுத்திக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment