Wednesday, 27 June 2012

மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி

ஒன்பது நாட்கள் விடுப்பிற்குப் பிறகு, நேற்று தான் அலுவலகத்திற்கு வந்து பணிகளைத் துவக்கினேன். கடைசியாக, அதிக நாட்கள், நான் விரும்பி(!) விடுப்பெடுத்தது, என் திருமணத்தின் போது தான், மூன்று வாரங்கள். எங்க பொன்ப்ரியா பிறந்த போது கூட ஐந்து நாட்கள் தான் விடுப்பெடுத்தேன் (சனி, ஞாயிறு உட்பட). அப்பொழுது, நான் பணி புரிந்து கொண்டிருந்த அலுவலகத்தில், வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி இல்லை. தற்போதைய அலுவலகத்தில், அந்த வசதி உண்டு. இருந்தும் எனக்கு அது சரிப்படவில்லை.

சென்ற வாரம் முழுவதும், மதுரை மற்றும் அதன் சுற்று வாட்டர ஊர்களுக்கு செல்ல நேர்ந்தது. பொதுவாக, நான் மதுரைக்கு விடுமுறைக்குச் சென்றால், வீட்டை விட்டு எங்கும் செல்வது இல்லை. அதனால் தானோ, என்னவோ, எனக்கு ஊருக்கு செல்வதில் பெரிய ஆர்வம் இல்லை. இதுவும் கூட, நான் அடிக்கடி விடுப்பு எடுக்காததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த விடுமுறை அப்படி ஒரு சாதாரணமான அனுபவம் இல்லை.

சூன் 19, நாகர்கோவிலில் உள்ள, என் மனைவி மீனாவின் தோழிகளில் இருவரை சந்திப்பதற்காக, குடும்பத்துடன் சென்றோம். பெரிதாக ஊர் சுற்றவில்லை.இருந்தாலும், அவர்களுடன் தங்கியருந்த இரண்டு தினங்களும் மகிழ்ச்சியாகவே கழிந்தது.

சூன் 21, நண்பர் முத்துக்கண்ணன் - சுபத்ரா அவர்களின் திருமணத்திற்க்காக தூத்துக்குடிக்குச் சென்றிருந்தேன். என் குடும்பத்தாரை, நாகர்கோவிலில் இருக்க வைத்துவிட்டு, நான் மட்டும் தனியாகவே சென்றேன். நீண்ட நாட்களுக்கு பிறகு யாரோட கையையும் பிடித்துக்கொண்டு நடக்காமல், நானாக சில மணி நேரங்கள் இருக்க வாய்ப்பு கிடைத்தது.

நண்பர் முத்துக்கண்ணனை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். அதற்க்கு மேலும் அங்கு நண்பர் கணேஷ் அவரையும், திரு. செந்தில் அவர்களையும் சந்திக்க முடிந்தது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பும், அவரோடு நாகர்கோவில் வரை பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுடன் கேட்டது, பேசியது பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன். இதை முடிப்பதற்கே எனக்கு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

இந்த வாரம் திங்கள் கிழமை, நீண்ட விடுமுறைக்குப்பிறகு மீண்டும் பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவனைப் போல அழுதுகொண்டே அலுவலகம் வந்தேன்.

No comments:

Post a Comment