Tuesday 20 November 2012

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

இன்றும் நேற்றும், பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. சரி, நண்பர்களை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம் என்று  பேஸ் புக், கூகுள் +, ப்ளாக் என்று சுத்திக்கொண்டு இருந்தேன். அப்பொழுது என் கண்ணில் பட்டது "நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்". என்னால் நம்ப முடியவில்லை, ஆண்களுக்கு தினமா? இதைத் தொடர்ந்து "ஆண்கள் பாதுகாப்பு சங்கம்" என்ற அமைப்பு பற்றியும், அது பரபரப்பாக இயங்கி வருவதையும்  கேள்விப்பட நேர்ந்தது. ஆண்களுக்கு இந்த மாதிரி அமைப்புகள் தேவையா? ஒரு வேலை, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் கண்ணீர்க் கதையைக் கேட்டால், இந்த அமைப்புகளின் அவசியம் தெரியும்.

சில தினங்களுக்கு முன்பு தொலைக்கட்சியில், கம்பன் கழகம் சார்பில் நடத்தப்பட்ட சுழலும் சொல்லரங்கம் ஒளிபரப்பப்பட்டது. இதன் தலைப்பு, இராமாயணப் பெண்களின் அழகைப் பெரிதும் பறைசாற்றுவது அவர்களின் பாசமா, தியாகமா, உறுதிப்படா, கொடுங்குணமா, மதி நுட்பமா.

நடிகர் திரு.ரஜினிகாந்த்,  கலந்து கொண்டதால் அதை பார்க்கலாம் என்று சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் பேசுவார் என்று எதிர் பார்த்தேன், ஆனால் பேசவில்லை. ஆனால், நன்றாக நிகழ்ச்சியை ரசித்தார். 

சிறிது நேரத்திற்கெல்லாம், நான் அந்த நிகழ்ச்சியில் ஒன்றிப்போயிருந்தேன். அவர்கள் ஒவ்வொரு பாடலையும், அவரவர் பாணியில் விளக்கிக் கொண்டிருந்தனர்.  அங்கு பேசியவர்களில், திருமதி. பாரதி பாஸ்கர் தவிர யாரையும் தெரியவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் பெண்களே, நடுவர் திரு இலங்கை ஜெயராஜ் தவிர. ஒரு பெண்மணி, ராமாயண பெண்களின் மதி நுட்பம் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார், அவரிடம் நடுவர் திடீரென்று  ஒரு கேள்வி கேட்டார். "பெண்ணுக்கான பண்பு என்று நான்கு இருக்கிறது 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' இதில் 'மடம்' என்ன என்பதை விளக்க முடியுமா?" என்றார். அந்தப் பெண் சற்றே தடுமாறி, ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அதற்க்கு முன்னே நடுவர் விளக்கம் தர ஆரம்பித்துவிட்டார். "மடம்  என்றால் மடமை." என்று ஆரம்பித்து பல மேற்கோள்களைக்  காட்டி, பேச்சைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். 

அதன் முடிவில், "ஒரு பெண், அவளது கணவனை காட்டிலும் மிகுந்த அறிவாளியாக இருந்தால், அவளை, அவள் கணவனால் ரசிக்க முடியாது" என்றார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. மேலும் பெண்ணை,  தேவை இல்லாமல், நாகரீகம், புரட்சி என்ற பெயரில் அதிகம் படிக்க வைப்பதாகவும் வருத்தப்பட்டார். ஐந்து பெண்கள், அதுவும் பட்டிமன்ற பேச்சாளர்கள், சுற்றி அமர்ந்திருக்க, அவர் இப்படிச் சொன்ன போது, அவர்களின் முகங்கள் நன்றாகவே வாடிப் போயின. அவர்களால் என்ன செய்ய முடியும், அவை-நாகரீகம் கருதி அமைதி காத்தனர் என்றே கருதுகிறேன் 

முதலில் எனக்கே, நடுவரின் கருத்து மேல் உடன்பாடில்லை. 'இது என்ன பைத்தியக்காரத்தனம்' என்றே தோன்றியது. மேலும், மேலும் அவர்  கூறியதைப் பற்றி சிந்திக்கும் போது. திடீரென்று, அவர் சொன்னது சரி என்று பட்டது. நானா இப்படி ஒரு விஷயத்தை சரி என்று சொல்கிறேன்? எனக்கும் ஆச்சர்யம் தான். 

மனித சமுதாயம் பிழைத்துக்கிடக்க, இப்படி யாரவது ஒருவர் அடங்கி அல்லது பொருத்துப் போகத்தான் வேண்டும். இதில் பொதுவாக, சற்றே ஆணை விட உடல் வலிமை குறைந்த பெண் அடக்கி வைக்கப் படுகிறாள். இது அத்தியாவசியம் மேலும் எல்லா சமயங்களிலும் பெண் அடங்கிப்போவதில்லை. கணவனை இழந்த என் தாய், என்னையும், என் அண்ணனையும் அடக்கிவைத்தாள். இதில் ஆண், பெண் என்ற பேதமை எங்கே?  பட்டிமன்றங்களுக்கு எதற்காக நடுவர் இருக்கிறார்? அதைப்போலத் தான் இதுவும்.

என்னைப் பொறுத்தவரை, மனித இனம், தலைமை என்று ஒன்று இல்லாமல், எல்லாம்  சமமாகும் போது,  அழிவை நோக்கிச்செல்லும்.  

ஆமாம், எல்லா விலங்குகளிலும், ஆண் அப்படித்தானே இருக்கிறது, மனிதன் மட்டும் எந்த விசயத்தில் குறைந்தவன் ;)

No comments:

Post a Comment