Tuesday 4 December 2012

தோசைக்கல் எத்தனை?

ஆனந்த விகடனில், "நீயா நானா" திரு. கோபிநாத் அவர்கள் ஒரு புதிய தொடரை ஆரம்பிக்க இருக்கிறார். இந்த தொடருக்கான முன்னுரை, இந்த வார இதழில் (5/12/2012), வந்திருந்தது.

ஆனந்த விகடனின் இந்த வார இதழ் பற்றி

இந்த இதழின், மொத்த பக்கங்கள் 100. அதில் விளம்பரங்கள் தாங்கி வந்த பக்கங்கள் 30. மேலும், 'பொக்கிஷம்' என்ற பெயரில், அவர்களது பழைய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 10 பக்கங்கள்.பேஸ்-புக்-போலவே 2 பக்கம்.  பேஸ்-புக்-இல் இருந்து எடுக்கப்பட்ட 2 பக்கம். மொக்கையான பக்கங்கள் ஒரு 10. இவங்க நிஜமாவே, மெனக்கெட்டு தான், ஒவ்வொரு இதழையும் கொண்டு வருகிறார்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.

கோபிநாத் பற்றி

எனக்கு, கோபிநாத் பேச்சுக்கள் மீது பெரிதாக மரியாதை எதுவும் இல்லை. இதற்க்கு, அவர் நடத்தும் "நீயா நானா" தான் காரணம். அவர் ஏற்க்கனவே ஒரு புத்தகம் எழுதியதாக கேள்விப் பட்டேன். ஆனால், வாங்கிப் படிக்கும் ஆர்வம் தூண்டாததால், அதைப் படிக்கவில்லை. மேலும் அவரே அதை வாங்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டிருக்கிறார், வேறு என்ன வேண்டும் நமக்கு. "அப்படியே ஆகட்டும்" என்று விட்டு விட்டேன் :)

இப்போ மேட்டருக்கு வருவோம். இவரது முன்னுரையில்,  'இப்போதெல்லாம் நாம் தேவைக்குப் பொருட்கள் வாங்குவதில்லை, பொருட்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன' என்று கூறி இருந்தார்.

சிறிது சிந்தித்துப் பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை. சரி என்று அதை விட்டுவிட்டேன். என் மனைவி, தன்னை மதுரையில் இருந்து சந்திக்க வரும் தன் தாயிடம், ஏதோ ஒரு பாத்திரம் வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது நான், "அதுதான் ஏற்கனவே 2, 3 பாத்திரம் இருக்கே, அப்புறம் எதுக்கு வேற ஒன்னு கேக்குற?" என்றேன்."மீன் பொரிக்க வேணும்" என்றாள். வழக்கம் போல,  அதன் பிறகு,  நான் கூறிய எதையும் அவள் கவனித்ததாக தெரியவில்லை.

மீண்டும், சிறிது நேர சிந்தனை. என் மனைவியிடம் கேட்டேன் "நம்ம  வீட்டில எத்தனை தோசைக்கல் இருக்கு?" "ம்ம்ம்...4". "எனக்கு வெவரம் தெரிஞ்சதில் இருந்து நான் படிப்பு முடிக்கிற வரைக்கும், எங்க அம்மா எத்தனை தோசைக்கல் வைத்திருந்தாங்க தெரியுமா? ...ஒன்னே ஒன்னு தான்".

இப்போது யோசிக்கிறேன், எத்தனை பிரஷர்  குக்கர்கள் இருக்கிறது. குறைந்தது 6 இருக்கும். வித விதமான அளவுகளில். ஒன்னு, நிறைய தண்ணி துப்புதாம், அதுக்கு மாற்றா அதே அளவுல இன்னொன்னு. ஒன்னு, பிரியாணிக்கு மட்டும். ஒன்னு, வீட்டுக்கு விருந்தாள், வந்தாங்கன்னா...அதுக்கு.

எத்தனை மிக்சி இருக்கிறது....ம்ம்மூணு.

இப்படி பல காரணங்களைச் சொல்லி, வீட்டில் வந்திருக்கும் தேவைக்கதிகமான பொருட்களை கொஞ்ச நேரம் பார்க்கிறேன். இவற்றின் மதிப்பின் கூட்டுத்தொகை எப்படியும் 10 - 15 ஆயிரத்தைத் தொடும். இவை அனைத்தும் கடந்த 4 வருடங்களுக்குள் ஆன செலவு. இதை சேமித்து வைத்திருக்கலாம், வேறு பயனுள்ள வகையில் செலவு செய்திருக்கலாம். இதில் ஒரு பகுதியையாவது சிரமப்படும் மக்களுக்கு கொடுத்திருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, பத்து ரூபாய்க்கு, மூன்று கட்டு கீரை கொடுக்கும் பாட்டியிடம், ஒரு கட்டு கீரை அதிகமாக வாங்க போராட்டம் நடத்துகிறோம்.

ம்ம்ம்...பார்க்கலாம், ஏதாவது மாற்ற முடிகிறதா என்று. முடிந்தால், நீங்களும் எண்ணிப்பாருங்கள், விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல ;)

No comments:

Post a Comment